எச்.டி., செட்டாப் பாக்ஸ் இருக்கு; சிக்னல் இல்ல; அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புலம்பல்
கரூர்: 'எச்.டி. செட்டாப் பாக்ஸ் வழங்கிய பின், அதற்கான சிக்னல் இன்னும் கொடுக்கவில்லை' என, அரசு கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் புலம்புகின்றனர்.கரூர் மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' 7 தாலுகாவில், 200க்கும் மேற்பட்ட ஆப்ரேட்டர்கள் மூலம், 90 ஆயிரம் இணைப்புகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 140 ரூபாயுடன் ஜி.எஸ்.டி., என்ற சந்தா கட்டணத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில், சிக்னல் கோளாறால், ஒளிபரப்பில் தடை ஏற்பட்டு, 50 ஆயிரம் இணைப்புகளை இழந்துள்ளது. இந்நிலையில், எஸ்.டி.க்கு (ஸ்டேண்டர்ட் டெபனிஷன்) பதில், எச்.டி. (ஹைடெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என, கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, கடந்த மாதம் முதல் எச்.டி. செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 9,000 எச்.டி. செட்டாப் பாக்ஸ் வந்துள்ளன. தேவைப்படும் சந்தாதாரர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இருந்த போதும், சிக்னல் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், எச்.டி. செட்டாப் பாக்ஸ் வைத்தும் பயனில்லை என புலம்புகின்றனர்.இது குறித்து, கேபிள் 'டிவி'ஆப்ரேட்டர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து சிக்னல் பெற்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இப்போது, எச்.டி. செட்டாப் பாக்ஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள எஸ்.டி.க்கு செட்டாப் பாக்ஸ்களுக்கு, 'பேண்ட் வித் ஒன் ஜி' லிங்க் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எச்.டி., செட்டாப் பாக்ஸ்க்கு சிக்னல் வேண்டும் என்றால், 'பேண்ட் வித் 2ஜி' லிங்க் பெற்றால் தான், தெளிவான எச்.டி. தரத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும்.இந்த சிக்னல் பெறும் வசதி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் கிடையாது. இதை தனியார் தொலை தொடர்பு நிறுவனம் வாயிலாக பெற முடியும். ஆனால், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில், முக்கிய நகரங்களில் மட்டுமே எச்.டி. சிக்னல் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற நகரங்களில், இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது குறித்து கேட்டால், எச்.டி. செட்டாப் பாக்ஸ், 50 சதவீதம் செயலாக்கம் செய்தால் மட்டுமே, சிக்னல் பெற வசதி செய்ய முடியும் என்கின்றனர். எச்.டி., செட்டாப் பாக்ஸ் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, எப்படி பதில் சொல்ல முடியும். தனியார் கேபிள் 'டிவி' போட்டியை சமாளிக்கவே அரசு கேபிள் 'டிவி'யிலும், எச்.டி. செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், சிக்னல் வழங்காமல் அவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான் உள்ளது. இவ்வாறு கூறினர்.இது குறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' துணை மேலாளர் ஒருவர் கூறுகையில்,'எச்.டி. சிக்னல் வசதி, தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எச்.டி., செட்டாப் பாக்ஸ் செயலாக்கத்துக்கு வந்தவுடன் சிக்னல் கொடுக்கப்படும்' என்றார்.