| ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
அரவக்குறிச்சி : ஒத்தமந்துறை அமராவதி ஆற்று பாலத்தில், மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர், திருப்பூர் மாவட்டங்களை இணைக்கும் கரூர் - தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் அருகே ஒத்தமந்துறையில், எல்லை பகுதியாக அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. 2008ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு, 2009 முதல் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.இரண்டு மாவட்டங்களை இணைக்கும், அமராவதி ஆற்று பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலம் பயன்பாட்டிற்கு வந்து, 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாலத்தில் மின்விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை.இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயம் இருப்பதால், எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டி உள்ளது. பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே, ஒத்தமந்துறை அமராவதி ஆற்று பாலத்தில், மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.