| ADDED : மார் 28, 2024 07:04 AM
ராசிபுரம் : தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற, அரசு ஊழியர்களுக்கு கடும் கெடுபிடியால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தேர்தல் பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவது வழக்கம். முக்கியமாக ஆசிரியர்கள், வருவாய் துறையினர், வேளாண்துறை அலுவலர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு, 3 நாட்கள் பயிற்சி, ஓட்டுப்பதிவு பணி ஆகிய அனைத்துக்கும் மதிப்பு ஊதியமாக, 1,350 ரூபாயில் இருந்து, 1,750 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. தேர்தல் பணிக்கு செல்பவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட விரும்பாதவர்கள், தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவ காரணத்தை கூறி புறக்கணிக்க முடியும்.உண்மையான மருத்துவ காரணத்திற்காக விடுமுறை கேட்பவர்களை விட, தேர்தல் பணிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் அதை தவிர்ப்பதற்காக விடுமுறை எடுப்பவர்கள் தான் அதிகம். இதை கட்டுப்படுத்த இந்தாண்டு மருத்துவ காரணங்களை உண்மையா? என ஆராய ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் மருத்துவக்குழு அமைக்கப்படவுள்ளது. அரசு ஊழியர்கள் மருத்துவ காரணம் கூறினால் அவர்கள் மருத்துவக்குழு முன் ஆஜராகி தங்கள் பிரச்னையை கூற வேண்டும். மருத்துவக்குழுவினர் உண்மை தன்மையை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். குறிப்பிட்ட கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைத்தலைவர் ஒப்புதலுடன் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் தான், அவருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த புதிய முறை பல மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வந்து சுற்றறிக்கையையும் அனுப்பி விட்டனர். இதனால், அரசு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.