கரூர்: சென்னை புழல் சிறையில் உள்ள, இலாகா இல்லாத அமைச்சர், தி.மு.க., சார்பில் நடக்கும் நான்கு பொதுக்கூட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என, அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வைரலாகியுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் 14-ல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ளார்.இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில், அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடபெற்று வந்தது. அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு நிகழ்ச்சிகளில், செந்தில்பாலாஜி பெயர், புகைப்படம் இடம்பெறவில்லை. இதற்கிடையே கரூர் ஜவகர் பஜார் உள்ள சந்திரபோஸ் சிலை அருகில், தி.மு.க., கரூர் சட்டசபை தொகுதி சார்பில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் கூட்டம் இன்று நடக்கிறது. இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டீஸ்சில், சிறப்புரை என்ற இடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோல, கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பில் உப்பிடமங்கலம், குளித்தலை தொகுதி சார்பில் தோகைமலை, அரவக்குறிச்சி தொகுதி சார்பில் அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், கூட்டம் நடக்கிறது. இதற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீசில், சிறப்புரை என்ற இடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் இடம் பெற்றுள்ளது. சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எப்படி பொதுக்கூட்டத்தில் பேச முடியும் என கேள்வி எழுப்பி, அந்த அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.