| ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கீழ தண்ணீர் பள்ளியில் அமைந்துள்ள மகா காளியம்மன், சிவஞான விநாயகர், கருப்பண்ண சுவாமி, மலையாள சுவாமி , மல்லாண்டேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய கிராம பொது மக்கள் முடிவு செய்தனர்.அதன்பேரில் நேற்று காலை தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் , பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தை யாகசாலையில் வைத்து, மகா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து இரண்டு கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், நேற்று காலை கோவில் மேல் உள்ள கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குளித்தலை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.