| ADDED : செப் 06, 2011 12:10 AM
கரூர்: 'காவிரியாற்று கரையோர பகுதிகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட குழிகளில் சிக்கிதான் மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர்' என வாங்கல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கரூர் வாங்கல் பகுதியை அடுத்த செவிந்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (32) இவரது வீட்டு கறி விருந்தில் கலந்து கொள்ள வந்த நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் லோகேஷ், மகள் பிரியா, கஜேந்திரன் என்பவரது மகன்கள் சரவணன், சதீஷ், ராஜாமணி என்பவரது மகன் கோகுல் ஆகிய ஐந்து பேரும் கடந்த 4 ம் தேதி மாலை 3 மணிக்கு காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்த நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் வாங்கல் பகுதியில் மட்டுமல்ல, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காவிரியாற்றில் அரசு விதிமுறைகளை மீறி அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. குறிப்பாக காவிரியாற்று கரையோர பகுதிகளில் பொக்லின் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் பல அடி வரை குழிகள் ஏற்படுகிறது. காவிரியாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்லாத நிலையில் பிரச்சனை இல்லை. ஆனால் ஆற்றில் பாசனத்துக்காக அதிகளவில் தண்ணீர் செல்லும் போது, கரையோர பகுதிகளில் உள்ள குழிகள் பற்றி யாருக்கும் தெளிவாக தெரிவது இல்லை. குறிப்பாக, வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களுக்கு குழிகள் இருப்பது தெரிய வாய்ப்பில்லை. கரையோர பகுதிகளில்தானே குளிக்கிறோம், என்ற ஆர்வத்தில் ஆற்றில் இறங்கி விடுகின்றனர். ஆனால் மணல் தோண்டப்பட்டதால் ஏற்பட்ட பல அடி குழிகளில் சிக்கி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை இறந்து விடுகின்றனர். வாங்கல் மற்றும் மாயனூர் காவிரியாற்று பகுதிகளில் பலர் உயிர் இழந்துள்ளனர். காவிரியாற்று பகுதிகளில் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதை தடுக்க பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல், எந்த ஆட்சி நடைபெற்றாலும் அதிகாரிகளின் அலட்சியபோக்கு மாறுவதில்லை. தொடர்ந்து, 'கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரியாற்று பகுதிகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளும் சட்ட விரோத செயல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது' என உள்ளூர் மக்கள் பெரும் ஆதங்கத்தில் உள்ளனர்.