கரூர்: கரூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் நேற்று மனுதாக்கல் செய்தார்.கரூர் நகராட்சித் தலைவர் தேர்தலுக்காக அ.தி.மு.க., வேட்பாளராக இனாம் கரூர் நகர செயலாளர் செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணிவரை எமகண்டம் என்பதால், வெங்கமேட்டில் உள்ள அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு நேற்று காலை 12.10 மணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், எம்.எல்.ஏ., காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து திறந்த ஜீப்பில் கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கரூர் நகராட்சி பெத்தாச்சி கட்டிடத்துக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி, வேட்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது, அங்கு வந்த நகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான ரவிச்சந்திரன், 'தலைவர் பதவிக்கு மாடி மேல் சென்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்' என பவ்யமாக தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, 'வேட்பாளர் உள்பட நான்கு பேர் மட்டும் வந்தால் போதும்' என கட்சியினரிடம் தெரிவித்தார். இதையடுத்து வேட்பாளர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அங்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மைவிழி செல்வியிடம் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், 12.55 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அங்கிருந்த ஃபோட்டோ கிராபர்கள் மற்றும் நிருபர்களை பார்த்து, ' மாற்று வேட்பாளரும் மனுதாக்கல் செய்வதால் நான்கு பேருக்கும் அதிகமாக உள்ளோம்' என திரும்ப, திரும்ப போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி கொண்டிருந்தார். அப்போது, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், தாந்தோணி நகர செயலாளர் தார ணி சரவணன், முன்னாள் மாவ ட்ட செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் உடனிருந்தனர்.