உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டம்: சில வரி செய்திகள்

கரூர் மாவட்டம்: சில வரி செய்திகள்

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

குளித்தலை: குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, மேலாண்மை குழு தலைவர் ரேவதி, அரசு வக்கீல் சாகுல், நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசினார். பின், 344 பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

மாணவி கீழே குதித்த விவகாரம் ஆசிரியை மீது வழக்குப்பதிவு

கரூர்: கரூரில், பள்ளி மாணவி மாடியில் இருந்து கீழே குதித்த விவகாரத்தில், ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர், மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 17 வயது மாணவி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்துள்ளார். அதில், மாணவிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியை சுதா, 45, என்பவர் திட்டியதால், கீழே குதித்ததாக போலீசில் மாணவி புகார் அளித்தார். இதனால், பள்ளி ஆசிரியை சுதா மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

க.பாளையம் அரசு பள்ளி மேலாண்மை கூட்டம்

கரூர்: கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவு மலர் தலைமையில் நடந்தது.அதில், கல்வி வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும், பள்ளி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், விடுமுறை இல்லாமல் பள்ளி வந்த மாணவர்கள், சிறந்த பெற்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில், தலைமையாசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள் ஜூலிடாமேரி, அமுதராணி, தெரசாராணி, ஜெயபாரதி, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை மூலம் தைப்பூச திருவிழா நடத்த கோரி மனு

குளித்தலை: தைப்பூச திருவிழாவை நடத்தக்கோரி, குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தமிழர் தேசம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருவதால், தைப்பூச திருவிழா ரத்து செய்யப்படுவதாக ஹிந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. திருவிழா தொடர்ந்து நடைபெற எட்டு கிராம பொது மக்கள், கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் செயல் அலுவலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் கள்ளை அருள் தலைமையில், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் குளித்தலை ஆர்.டி.ஓ., ரவியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை