| ADDED : ஆக 03, 2011 01:20 AM
கரூர்: உள்ளாட்சி தேர்தல் விரைவில் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கரூரில்
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள, புதிய நகராட்சி வார்டுகளில் தற்போதைய
கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிரடியாக அதிகாலை முதல்
ரவுண்ட்சில் ஈடுப்பட்டு பொதுமக்களிடம் குறை கேட்டு வருகின்றனர்.தமிழகத்தில்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 21 ம் தேதிக்குள் தேர்தல்
நடத்தப்பட வேண்டும். தமிழக பொது பட்ஜெட்டுக்கு பிறகு, எந்த நேரத்திலும்
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம். கரூர், இனாம் கரூர்,
தாந்தோணி நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 80
வார்டுகள் இணைக்கப்பட்டு, 48 வார்டுகள் மட்டுமே கொண்ட விரிவாக்கம்
செய்யப்பட்ட கரூர் நகராட்சியின் புதிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.வரும்
உள்ளாட்சி தேர்தலில் விரிவாக்கம் செய்யப்பட்ட 48 வார்டுகளை கொண்ட புதிய
கரூர் நகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கரூர் உள்ளிட்ட
மூன்று நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்தில் உள்ள தற்போதைய 80
கவுன்சிலர்கள் மீண்டும், தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சியின் முக்கிய
நிர்வாகிகளை 'தாஜா' செய்து வருகின்றனர். 80 வார்டுகள் 48 ஆக
குறைக்கப்பட்டுள்ளதால், வரும் உள்ளாட்சி தேர்தலின் போது, சீட் பிடிக்க
கடும் போட்டி ஏற்படும்.சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக போட்டியிடவும்
வாய்ப்புண்டு. மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிடும் கனவில் உள்ளவர்களும் களத்தில் குதிக்க முயன்று
வருகின்றனர்.விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய கரூர் நகராட்சியில்
அடங்கியுள்ள 48 வார்டுகளை பற்றிய விபரம், அடங்கியுள்ள தெருவின் பெயர்கள்
கொண்ட பட்டியல், தற்போது பதவியில் உள்ள கவுன்சிலர்களுக்கு ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ளது.புதிய வார்டுகளில் உள்ள ஜாதி பலம், வெற்றி வாய்ப்பு,
முக்கிய பிரச்னை மற்றும் வார்டுகளில் உள்ள வி.ஐ.பி., க்கள் குறி த்து
தற்போதைய கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆராய்ந்து
வருகின்றனர்.தற்போதைய கவுன்சிலர்கள், அதிகாலையில் எழுந்து வார்டுகளில்,
'தண்ணீர் வந்து விட்டதா, ஏதாவது பிரச்சனை உள்ளதா, மூதியோர் உதவி தொகை
வேண்டுமா' என கேட்டு ரவுண்ட்ஸ் வருகின்றனர். கட்சி நிர்வாகிகளும் அந்தந்த
பகுதிகளில் நடக்கும் சிறிய விழாக்களில் கூட தி டீரென தலைகாட்டி, மக்களுக்கு
'கும்பிடு' போடுகின்றனர்.பல மாதங்களாக வார்டு பக்கம் வராத
கவுன்சிலர்களும், இதுவரை கண்டு கொள்ளாமல் சென்ற கட்சி நிர்வாகிகளும்
திடீரென காட்டும் பாசத்தால், கரூர் நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும்
நெகிழ்ந்து போயுள்ளனர்.எது எப்படியோ, உள்ளாட்சி தேர்தல் தேதி
அறிவிக்கப்படும் முன்னர் கரூரில் உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும்
பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பதவி ஜூரம் பிடிக்க தொடங்கி
விட்டது' என மக்கள் வெ ளிப்படையாக பேசுகின்றனர்.