கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, ஆறுமுக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து சுவாமி உட்பிரகார புறப்பாடு நடந்தது. பின் லட்சார்ச்சனையுடன் தீபாராதனை காட்டப்பட்டது.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வரும், 27ல் நடக்கிறது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், மாலை, 3.30 மணிக்கு சக்திவேல் வழங்குதல், 4.00 மணிக்கு கோவில் வளாகத்தில் நான்கு மாடவீதிகளில் சூரசம்ஹார விழா நடக்கிறது. 28 காலை, 10:30 மணி முதல், 11:30 மணிக்குள் வள்ளி-தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண காட்சியுடன் திருவீதி உலா நடக்கிறது.