| ADDED : பிப் 18, 2024 10:34 AM
அரவக்குறிச்சி: டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரவக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் கவுசல்யா கூறியதாவது:மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் அலட்சியம் காட்டாமல், மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைய முடியும்.ஆரம்ப கட்டத்தில் அலட்சியம் காட்டினால், ஆபத்தான நிலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால், டெங்கு குறித்து எந்த பயமும் வேண்டாம். வீட்டிலோ, வீட்டின் அருகிலோ நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நிலவேம்பு கஷாயம் பயன்படுத்தலாம். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுத்து சுற்றுப்புறத்தில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொண்டால் போதும். இதன் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இவ்வாறு கூறினார்.