உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூலிப்படையை வைத்து தாக்குதல் திட்டம்; துப்பாக்கி, ஆயுதங்களுடன் 7 பேர் கைது

கூலிப்படையை வைத்து தாக்குதல் திட்டம்; துப்பாக்கி, ஆயுதங்களுடன் 7 பேர் கைது

கரூர்: முன் விரோதம் காரணமாக, கரூரில் கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்த, துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த, ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.கரூர், ராயனுார் பழனிவேல் நகரை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, திருமாநிலையூரை சேர்ந்த சோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சோபனா வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த, அவரது தோழியான ரம்யா என்பவருக்கும், தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததால், விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த மாதம், 10-ல் பிரச்னை ஏற்பட்டு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சோபனாவின் கணவர் ராமசுப்பிரமணி, இப்பிரச்னை காரணமாக விஜயின் உறவினர்களை பழிவாங்கும் நோக்கத்தில், தனது வீட்டில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக, தான்தோன்றிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. பின், ராமசுப்பிரமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருடன் தொடர்பில் இருந்த கூலிப்படை குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபால், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த யுவராஜ், மூர்த்தி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கை துப்பாக்கிகள், ஆறு துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதையடுத்து, ராமசுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய ராமசுப்பிரமணி தவறி விழுந்து கால் முறிந்ததால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ