கார் - பைக் மோதியதில்வாட்ச்மேன் உயிரிழப்புகாரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாட்ச்மேன் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே ஜெயபுரத்தை சேர்ந்தவர் மல்லீஸ்வரன், 58. இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பள்ளப்பட்டியில் இருந்து, காயிதே மில்லத் நகரை சேர்ந்த முஸ்தாக் அலி, 40, என்பவர் ஓட்டி வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மல்லீஸ்வரன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.மாணவ, மாணவிகளுக்குஇலவச சைக்கிள் வழங்கல்குளித்தலை அடுத்த, கடவூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். கடவூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். 78 மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.'சென்டர் மீடியன்' வைக்கப்பட்டதால் 3 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் அவலம்அரவக்குறிச்சியில் இருந்து கணக்குப்பிள்ளை புதுார் பிரிவுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், காமக்காப்பட்டிக்கு பிரிந்து செல்லும் சாலையில் புகுந்து சென்று வந்தனர்.தற்போது, இந்த சாலையில், 'சென்டர் மீடியன்' வைக்கப்பட்டுள்ளதால், நேரே செல்ல முடியாமல், 3 கிலோ மீட்டர் துாரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை, அரவக்குறிச்சியில் இருந்து தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது, சென்டர் மீடியன் வைக்கப்பட்டதால், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, நான்கு முனை சந்திக்கும் இந்த சாலையில், ஏற்கனவே இருந்தது போல பாதை ஏற்படுத்தி தர வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.'உங்களை தேடிஉங்கள் ஊரில்' திட்டம்தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம், நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதில், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் நாள் முழுவதும் கிராமத்தில் தங்கி, மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, மலைக்கோவிலிலுாரில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும், குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாடி மேல் பாகம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையை ஆய்வு செய்தார்.பின், அரவக்குறிச்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் பயிலும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது, 8 முதல், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால், கணினி ஆய்வகத்தில் படித்து வுந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என, ஆசிரியர்கள், கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.இரு மொபைல்போன் டவரில்பேட்டரி திருட்டு: 4 பேர் கைதுஇரு மொபைல்போன் டவரில் இருந்த பேட்டரிகளை திருடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருவேலங்காடு, கொடையூர் என இரு இடங்களில் தனியார் மொபைல்போன் டவர்கள் உள்ளன. இரண்டு டவர்களின் கண்காணிப்பு மையத்திலும் நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்றனர். அங்கு கேட் உடைக்கப்பட்டு, பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.ஏற்கனவே, கடந்த இரண்டு மாதங்களாக பேட்டரிகள் திருட்டு போனதாக அதிகாரிகள் அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பள்ளப்பட்டி அண்ணா நகரில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த, நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் பள்ளப்பட்டியை சேர்ந்த தமிம் அன்சாரி, 26, மைதீன் கான், 30, சேஷா, 23, ஹைதரலி, 31, என தெரிய வந்தது. இவர்கள் நான்கு பேரும் ஒவ்வொரு டவரிலும், 24 வீதம், 48 பேட்டரிகள் திருடியது தெரியவந்தது. அதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்.அரவக்குறிச்சி போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.நீலமேக பெருமாள் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்குளித்தலையில், 1,200 ஆண்டுகள் பழமையான முதலாம் பராந்தக சோழன், நங்கை கொற்றி, முதலாம் மகேந்திரவர்மன், முத்து பூபால சமுத்திரன் போன்ற அரசர்களால், திருப்பணி செய்யப்பட்ட கோவிலாக கமலநாயகி தாயார் சமேத நீலமேக பெருமாள் கோவில் உள்ளது.கடந்த, 2003ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம், உபயதாரர்கள், உற்சவதாரர்கள், ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கோவில் புனரமைப்பு பணி முடிவடைந்தது. கடந்த, 28ல் கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. அதை கும்பத்தில் வைத்து யாகசாலையில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.தொடர்ந்து, யாகசாலையில் ஐந்து கால பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை கோ பூஜை, விசேஷ ேஹாமங்கள் நடந்தன. காலை 9:50 மணியளவில் கோவில் கோபுரங்களுக்கு பூஜை செய்து, கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.உபயதாரர்கள், பக்தர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வேகத்தடைகளில் வெள்ளைபெயின்ட் பூசும் பணி தீவிரம்நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, கரூரில் வேகத்தடைகளில் பெயின்ட் பூசும் பணி நடந்து வருகிறது.கரூர் மாநகராட்சி பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்காக பள்ளிகள், மருந்துவமனை, சாலை சந்திப்பு, மக்கள் அதிகமாக கடந்து செல்லும் பகுதிகள், அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை அமைப்பதற்கு முன், அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும், 10 மீட்டர் துாரத்துக்கு முன்பாக வெள்ளை பெயின்ட்டால் எச்சரிக்கை கோடு போட வேண்டும்.தற்போது கரூர் பழைய அரசு மருத்துவமனை, கரூர் மாநகராட்சி குமரன் பள்ளி, பழைய நீதிமன்றம் ஆகிய சாலைகளில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகளில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், வெள்ளை கோடு இல்லை என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வேகத்தடைகளில் வெள்ளை பெயின்ட் பூசும் பணியில், நெடுஞ்சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சத்தி அருகே தீ விபத்து6 ஆடுகள் உயிரிழப்புசத்தியமங்கலம் அடுத்த, கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 65, கூலித்தொழிலாளி. இவர் மனைவி துளசியுடன் தென்னங்கீற்று, தகரத்தினால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.இவர்களது வீட்டிலிருந்து புகை வந்தது. சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, பொருட்கள், ஆட்டு பட்டியிலிருந்த ஆறு வெள்ளாடுகள் தீயில் கருகி இறந்தது. பின்பு, எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில்கொடி மரத்துக்கு கும்பாபிஷேகம்கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில், பழைய கொடிமரம் சேதமடைந்ததால், புதிய கொடி மரத்துக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையடுத்து புதிய கொடி மரத்துக்கு, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, அதற்கான விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. நேற்று பஞ்ச காவ்ய பூஜை, கலச பூஜை, சிறப்பு யாக பூஜை, கலச புறப்பாடுக்கு பின், கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள், கலச நீரை கொடி மரத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் செய்விக்க, கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கோஷமிட்டனர். கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.டி.என்.பி.எல்., ஆலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித உற்பத்தி ஆலையில், தியாகிகள் தின உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை பொது மேலாளர் (நிதி) சுபாசிஷ் டே தலைமை வகித்தார். மறைந்த தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன், முதுநிலை மேலாளர் (வணிகம்) குமாரராஜா, மேலாளர் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனைலாலாப்பேட்டை, வாழைக்காய் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, மகிளிப்பட்டி, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்கப்படுகிறது.கடந்த வாரம் முதல் வாழைத்தார்கள் சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.மானாவாரி நிலங்களில்கம்பு அறுவடை தீவிரம்கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புனவாசிப்படி, வரகூர், சரவணபுரம், வயலுார், பாப்பகாப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி விளை நிலங்களில் கம்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர். பருவமழை காரணமாக, கம்பு பயிர் பசுமையாக வளர்ந்து செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலடைந்துள்ளது. இதனை அறுவடை செய்யும் பணியில், விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ம.தி.மு.க., பொதுக்கூட்டம்ம.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், பள்ளப்பட்டி ஷா நகர் பகுதியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பூபதி தலைமை வகித்தார். இதில், தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினார். மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் பால சசிகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஆர்த்தியா பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மருதுார் டவுன் பஞ்.,சாதாரண கூட்டம்குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சரவணன் கூட்ட பொருள்களை வாசித்தார்.இதில், மருதுார் அக்ரஹாரம் தெருவில் புதிய தார்ச்சாலை அமைத்தல், மேட்டுமருதுார் ஐந்தாவது வார்டில் சேதமான சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய சுகாதார வளாகம் அமைத்தல் உள்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கரூர் கலெக்டர் ஆபீசில்நாய்கள் தொல்லைகரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம்உள்ளன. அடுத்தடுத்து மூன்று அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த வளாகத்தை சுற்றிலும் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வளாகத்தில் ஏராளமானோர் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த அலுவலக வளாக பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவு தெரு நாய்களின் நடமாட்டம் உள்ளது. அவற்றின் தொல்லையால் அலுவலகங்களுக்கு வரும் அனைவரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால், தேசிய பறவையான மயில்களும் பாதிக்கப்படுகின்றன. அனைவரின் நலன் கருதி சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும்.கொம்பாடிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீண்கிருஷ்ணராயபுரம் அடுத்த கொம்பாடிப்பட்டி கிராமத்தில், குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக, கொம்பாடிப்பட்டி சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தினமும் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, பஞ்., நிர்வாகம் விரிசலடைந்துள்ள குடிநீர் குழாயை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீஸ் ஜீப் மோதிதொழிலாளி காயம்போலீஸ் ஜீப் மோதி, கூலி தொழிலாளி காயமடைந்தார்.குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 54, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் ராஜேந்திரம் காவேரி ஆற்றில் குளித்துவிட்டு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, தஞ்சாவூரில் இருந்து கருர் நோக்கி வந்த தஞ்சாவூர் ஏ.எஸ்.பி.,யின் ஜீப், மொபட் மீது மோதியது.இதில் முருகன் பலத்த காயமடைந்தார். பின் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.