உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேறும், சகதியுமான இடத்தில் ராட்டினம்: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

சேறும், சகதியுமான இடத்தில் ராட்டினம்: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

கரூர் : அமராவதி ஆற்றங்கரை சேறும், சகதியுமான உள்ள நிலையில், ராட்டினம் அமைக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 12ல் துவங்கி ஜூன், 11 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்புதல் வரும், 29ல் நடக்கிறது. பசுபதிபாளையம் பாலம் அருகில், அமராவதி ஆற்றங்கரையில் கம்பம் விழாவையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றங்கரையில் ராட்டினம் உட்பட பொழுதுபோக்கு அரங்குகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த, 2003ம் ஆண்டு அமராவதி ஆற்றங்கரையில் நடந்த ராட்டினம் விபத்தில், 10 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதன் பிறகு ராட்டினம் அமைக்க விதிக்கப்பட்ட தடைகள், காலப்போக்கில் காற்றில் பறந்தன. 2013ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அமராவதி ஆற்றங்கரையில் கம்பம் விழா நடக்கும் இடத்திலிருந்து, 200 மீட்டர் தொலைவுக்குள், ராட்டினம் போன்ற பொழுபோக்கு அரங்குகள், தரைக்கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது.அமராவதி வடிநில கோட்ட பொறியாளர், எந்த இடத்தில் இவைகளை அமைக்கலாம் என அனுமதி வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையின் கட்டட கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளரிடம் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி, பின் அனுமதி வழங்க வேண்டும். இந்த உத்தரவு சில ஆண்டுகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐந்துக்கும் மேற்பட்ட ராட்டினங்கள் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் கரையோரம் சேறும் சகதியுமாக உள்ளது. தற்போது, மணல் பிடிப்பு இல்லாத நேரத்தில் ராட்டினம் போன்ற பொழுது போக்கு உபகரணங்களை நிறுவுவது ஆபத்தானது.இவ்வாறு கூறினர்.இது குறித்து, அமராவதி வடிநில பிரிவு உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் கூறுகையில்,''கரூர் கலெக்டர் அலுவலக பரிந்துரைபடி, அமராவதி ஆற்றுப்பகுதியில் ராட்டினம் போன்ற பொழுபோக்கு அம்சங்கள் அமைத்து கொள்ள, இடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உறுதிதன்மை சான்றை பொதுப்பணித்துறையினர் வழங்க வேண்டும்,'' என்றார்.பொதுப்பணித்துறை கட்டட கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் சுஜாதா கூறுகையில்,'' ராட்டினம் உள்பட எதற்கும் உறுதி தன்மை சான்று வழங்கவில்லை,'' என்றார்.இது குறித்து கலெக்டர் தங்கவேலு கூறுகையில், ''அமராவதி ஆற்றுப்பகுதியில், ராட்டினம் போன்ற பொழுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து, ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட துறையினர், தடையில்லா சான்று வழங்கவில்லை என்றால் ராட்டினம் போன்ற அனைத்தும் அகற்றப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை