கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த மெகா விளம்பர பேனர் அகற்றம்
கரூர்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த மெகா சைஸ் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள மெகா பேனர்களால், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கட்சிக்காரர்கள் வைத்த பேனர் சரிந்து விழுந்த விபத்துகளில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் இருந்த மெகா பேனர்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கரூரில் மீண்டும் பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்பட பல்வேறு இடங்களிலும், மிக உயரமான கட்டங்களிலும் விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், வணிக வளாகத்தில் உள்ள மொட்டை மாடியில், ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து நமது நாளிதழில் கடந்த, 23ல் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், அங்குள்ள விளம்பர பேனர்களை அகற்றினர். இதுபோல மாநகரத்தின் பல இடங்களில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.