கரூர்: கரூர் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே, இரவு பகலாக அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும், நுாற்றுக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. ஏற்கனவே பாலத்தின் தடுப்பு சுவர்கள், பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள, பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த சில நாட்களாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள, அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், கரூர் அருகே சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள், வறண்ட நிலையில் உள்ளது. அதை பயன்படுத்தி கொண்டு, அனுமதி இல்லாமல் இரவு, பகலாக மாட்டு வண்டிகளில் பலர் மணல் அள்ளி செல்கின்றனர். குறிப்பாக இரவு, 11:00 மணி முதல் காலை, 5:00 மணி வரை உயர் மட்ட பாலத்தின் அருகே, மணல் அனுமதி இல்லாமல் அள்ளப்படுகிறது.மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் உள்ள இடத்தில், மூன்று கி.மீ., தொலைவில், ஆண்டாங்கோவிலில் அமராவதி ஆற்றில், புதிதாக தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாலத்தின் அருகே அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், துாண்களும், தடுப்பணையும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதியில், இரண்டு இடங்களில் மட்டும் மாட்டு வண்டியில், மணல் அள்ள அனுமதி க்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி இல்லை.இதனால், அமராவதி ஆற்றில் சுக்காலியூர் பகுதியில், பாலம் உள்ள இடங்களில் மணல் அள்ளுவதை தடுக்க, பொதுப்பணி துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.