கரூர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், கரூர் மாவட்-டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தி.மு.க.,வுக்கு தாவ தயாராகி வருகின்றனர். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த, 2019 டிச., மாதம் அ.தி.மு.க., ஆட்சியில், ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு பஞ்., தலைவர் பதவி மற்றும் மாவட்ட பஞ்., தலைவர் பதவிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது. பின் கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, தோகைமலை பஞ்., யூனியன் தலைவர்கள், தி.மு.க.,வுக்கு தாவினர். கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் தலைவர் பதவி, தேர்தல் மூலம், தி.மு.க.,வை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, க.பரமத்தி பஞ்., யூனியன் தலைவர் மார்க்கண்டேயன், நேற்று முன்தினம் நடந்த தென்னிலை கிழக்கு, பஞ்., புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ., இளங்கோவுடன் கலந்து கொண்டார். இதையடுத்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விரைவில் தி.மு.க.,வுக்கு தாவ உள்ளனர். இதுகுறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது:ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும், ஜன., மாதம் நிறைவு பெறுகிறது. அதற்குள், தேர்தலை நடத்த, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. தி.மு.க., ஆட்சி உள்ள நிலையில், தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால், ஊரக உள்-ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என, அ.தி.மு.க.,வினர், தி.மு.க.,வுக்கு தாவ தயாராக உள்ளனர்.மேலும், கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், நில அபகரிப்பு மோசடி புகாரில், ஒரு மாதமாக தலைமறைவாக உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை கண்-டித்தும், கரூரில் ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்து விடுவார் எனக்கூறி, அ.தி.மு.க.,வினரை, கட்சியில் சேர, தி.மு.க.,வினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.