கரூர்: காவிரி ஆறு வறண்டிருப்பதால், கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சி, 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 422 பேருக்கு தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 1 லிருந்து, 14 வார்டுகளுக்கு வாங்கல் நீரேற்று நிலையத்திலிருந்தும், 15லிருந்து 32 வார்டுகளுக்கு நெரூர் நீரேற்று நிலையம், 33லிருந்து, 48 வரை கட்டளை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடும் வறட்சி காரணமாக, வறண்ட காவிரி ஆற்றிலிருந்து நீரேற்று கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தற்போது கரூர் நகர பகுதிகளில், 5 முதல், 7 நாட்கள் வரையும், புறநகரில், 10 நாட்கள் முதல், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 10 நாட்களுக்குள் கிணறுகள் முற்றிலும் வற்றி போகும் அபாயம் இருக்கிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரூர் மாநகராட்சி பகுதிக்கு, 31.92 மெ.எல்.டி., குடிநீர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதில், நீரேற்று நிலையங்களில், 45 சதவீதம் தண்ணீர் கூட கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால், தினமும் கிடைக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர் இருக்கும் போது, மணலில் அசுத்தம் தங்கி விடும் என்பதால், ஓரளவு நல்ல குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆறு முற்றிலும் வறண்டு கிடப்பதால் சாய, சாக்கடை கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசுப்பட்டு உள்ளது. எந்த முன்னெரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால், குடிநீர் வினியோகம் முற்றிலும் முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.