கரூர் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும், கரூர் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று மாலை, 5:00 மணிக்கு கோவிலில் இருந்து கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும் கரூர் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:● வெங்கமேடு வழியாக வரும் பக்தர்கள், வாகனங்களை ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு, கோவிலுக்கு செல்ல வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில், டூவீலர்களுக்கு அனுமதி இல்லை. ● வாங்கல், பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தர்கள், வாகனங்களை பாலம்மாள்புரத்தில் நிறுத்தி விட்டு, ஐந்து சாலை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். பாலம்மாள்புரத்தில் இருந்து, எந்த வாகனங்களுக்கும் ஐந்து சாலை செல்ல அனுமதி இல்லை.● வாங்கல், பஞ்சமாதேவியில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள், கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மருத்துவமனை செல்ல, அரசு காலனி, வாங்கப்பாளையம் செக்போஸ்ட், வெங்கமேடு, சர்ச் கார்னர், தின்னப்பா கார்னர் வழியாக செல்ல வேண்டும்.● தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதியில் இருந்து பக்தர்கள், வாகனங்களை பசுபதி பாளையம் வாட்டர் டேங்க் மற்றும் தெற்கு தெருவில் பார்க்கிங் செய்துவிட்டு, அமராவதி பாலம் வழியாக, ஆற்றுக்கு செல்ல வேண்டும். கரூர் பஸ் ஸ்டாண்ட் செல்ல, கொளந்தா கவுண்டனுார், தெரசா கார்னர், சுங்ககேட் வழியாக செல்ல வேண்டும்.● காந்தி கிராமம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து பொதுமக்கள், வாகனங்களை பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர், 3 வது தெருவில் அருகே உள்ள இடத்தில் பார்க்கிங் செய்து விட்டு, அமராவதி பாலம் வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.● தான்தோன்றிமலை, திருமாநிலையூர் வழியாக வாகனங்களில் வரும் பொதுமக்கள், வாகனங்களை மக்கள் பாதையில் பார்க்கிங் செய்து விட்டு, கோவிலுக்கு செல்ல வேண்டும்.● கோவை சாலை வழியாக வரும் பக்தர்கள், வாகனங்களை திருவள்ளுவர் மைதானத்தில் பார்க்கிங் செய்து விட்டு, கோவிலுக்கு செல்ல வேண்டும்.● கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள், எம்.எல்.ஏ., அலுவலகம், உழவர் சந்தை வழியாக செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்கரூர், மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோவிலில், அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவர். தயிர் சாதம் படையல் என்பது முக்கியமான ஒன்றாக இந்த கோவிலில் கருதப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். இதுதவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.பிரார்த்தனையில் ஈடுபடும் பக்தர்கள்கரூர் மாரியம்மனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு அம்மை முதலான நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு, கரூர் மாரியம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த மாரித்தாய் இருப்பதால், இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.