மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் கோடை மழை
06-May-2025
கரூர்,தொடர் மழை காரணமாக, மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது.கரூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதை தவிர காவிரியாற்று பகுதிகளிலும், மழை பரவலாக பெய்து வருவதால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 218 கனஅடி தண்ணீர் வந்தது. தொடர் மழை காரணமாக காலை, 8:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 867 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 106 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 47.88 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 14 மி.மீ., மழை பெய்தது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.17 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், 12 மி.மீ., மழை பெய்தது.* கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அணைப்பாளையத்தில், 4 மி.மீ., மழை, பஞ்சப்பட்டியில், 10 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.17 மி.மீ., மழை பதிவானது.
06-May-2025