| ADDED : ஜூலை 11, 2011 11:54 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில், பல்வேறு சான்றிதழ்கள்
கேட்டு விண்ணப்பிப்போருக்கு சான்றிதழ்களை பிரித்து கொடுப்பதில், ஊழியர்கள்
அலட்சியம் காட்டுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு சான்றுகள் வேண்டி தினமும்,
500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளிக்கின்றனர். விண்ணப்பங்களை முறையாக
வாங்கி கொள்ளாமல், அலுவலத்துக்கு வெளியே உள்ள நிழற்குடையில்
வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு கூறுகின்றனர். மேலும்,
தாசில்தார் கையெழுத்திட்ட சான்றிதழ்களையும் நிழற்குடையில் உள்ள பெட்டியில்
போட்டு வைத்துள்ளனர். சான்றிதழ் வழங்க போதுமான அலுவலர்கள் இல்லாத நிலையில்,
பெட்டியில் உள்ள சான்றுகளை, விண்ணப்பித்தவர்கள் தேடி பிடித்து எடுத்து
செல்கின்றனர். பொதுமக்கள் இஷ்டம் போல் தங்களுக்குரிய சான்றிதழ்களை தேடும்
போது, மற்றவர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதோடு, பொதுமக்களுக்கு இடையில்
அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. சான்று கோரி வருபவர்களுக்கு உரிய
சான்றிதழ்களை தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.