அருங்காட்சியகத்திற்கு மாணவியர் களப்பயணம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 400 பேர், நேற்று மாவட்ட அரசு அருங்காட்சியகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், அவற்றின் பயன்கள், மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து புதையலாக பெறப்பட்ட நடுகற்கள், அகரம் மற்றும் செல்லகுட்டப்பட்டி ஜல்லிக்கட்டு நடுகல், பீமாண்டப்பள்ளி சதிகல், சின்னகொத்துார் குதிரைகுத்திபட்டான் நினைவுக்கல் குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் விளக்கினார். மேலும், லண்டன்பேட்டை மற்றும் புலிகாண்டியூர் மன்னர் மற்றும் ஆநிரை மீட்டல் நடுகற்கள், மல்லப்பாடி சுயபலி சிற்பம், கல்வெட்டுகள், ஆயுதங்கள், சங்ககால செங்கல், பானை ஓடுகள், கோட்டைகள், மாவட்டத்திலுள்ள பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருட்கள், புதைப்படிவங்கள் மற்றும் கலை மற்றும் இசை சார்ந்த பொருட்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில், வரலாற்று ஆசிரியர்கள் ரவி, செல்வகுமார், ஆரோக்கிய மேரி, வரலாற்று ஆர்வலர் மனோகரன், உருது ஆசிரியர் நயாசுல்லா, அறிவியல் ஆசிரியை ரோகினி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.