கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்., கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் கடந்த, 2006ல், 100 பயனாளிகளுக்கு சமத்துவபுரம் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் முதல், முதல்வர் தனிப்பிரிவு வரை, 18 ஆண்டுகளாக நுாற்றுக்கணக்கான மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் சமத்துவர வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா, ஆர்.ஐ., குமரேசன், மஹாராஜகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:கடந்த, 2006, தி.மு.க., ஆட்சியில் இந்த சமத்துவபுரத்தை, அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது அவர், முதல்வராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகள் ஆகியும், எங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை இல்லை. சமத்துவபுர வளாகத்தில், மின் இணைப்பு வழங்கினர். ரேஷன் கடை திறந்தனர். கடந்த, 2022ல், 44 லட்சம் ரூபாய் மதிப்பில், 94 வீடுகளை புனரமைத்தனர். ஆனால், எங்களுக்கான நிலங்களுக்கு, பட்டா வழங்க மட்டும் மனமில்லை. நாங்கள் எங்கு முறையிடுவது என்றும் தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'சமத்துவபுரம் நிலம் மேய்ச்சல் புறம்போக்கில் உள்ளது. இதற்கு பட்டா வழங்கும் அதிகாரம் நில நிர்வாக ஆணையரகத்திற்கு மட்டுமே உள்ளது. மக்களின் மனுக்களை அவர்களிடம் அனுப்பியுள்ளோம். தமிழக அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அனுமதி கொடுத்தால் தான், பட்டா வழங்க முடியும்' என்றனர்.