ஓசூர், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை உள்ளிட்ட விலங்குகளை நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடுவதை தடுக்க, 'ஒழிப்போம் துப்பாக்கியை, காப்போம் யானைகளை' என, வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்கலாம். கடந்த ஜூலை, 17 ம் தேதிக்குள் ஒப்படைக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி அறிவித்தார்.அதன் பயனாக மக்கள், ஓசூர் வனச்சரகத்தில் - 5, ராயக்கோட்டை - 1, உரிகம் - 20, கிருஷ்ணகிரி - 29, தேன்கனிக்கோட்டை - 36, அஞ்செட்டி - 21, ஜவளகிரி - 16 என மொத்தம், 128 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள், ஊர் முக்கியஸ்தர்கள், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவை, மத்திகிரியிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர் பார்வையிட்டனர். பின், அவை பயிற்சி டி.எஸ்.பி., பிரதீப், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்ற ஒத்துழைப்பு வழங்கிய, 61 பேருக்கு, மாவட்ட கலெக்டர் சரயு கேடயங்களை வழங்கினார்.