| ADDED : மார் 30, 2024 03:22 AM
கிருஷ்ணகிரி: புனித வெள்ளியையொட்டி, பெரிய சிலுவைப்பாதை நிகழ்ச்சி நேற்று நடந்தது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் ரட்சிக்க வந்த இயேசுவை, யூத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி, நேற்று காலை பெரிய சிலுவைப்பாதை நடந்தது. திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, ஆலய வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயேசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதே போல் கந்திகுப்பம், சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.