| ADDED : ஜூலை 22, 2024 12:33 PM
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில், ரயில்வே பாலத்தையொட்டிய, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் கடந்த ஏப்., 7ல் உடைப்பு ஏற்பட்டது. அதனால், ஓசூர் உழவர் சந்தை முன் தார்ச்சாலையை தோண்டி, அதன் அடியில் செல்லும் ஒகேனக்கல் குடிநீர் குழாய் லைனை மாற்றி, மாற்றுப்பாதையில் குடிநீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண்ணால் மூடினர். ஆனால் சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்யாமல் விட்டால், பெரிய அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. உழவர் சந்தை முன் உள்ள சாலையில் தான், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நீதிமன்றங்களுக்கு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் இச்சாலையை தான் பயன்படுத்துகின்றன. சாலை மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, உழவர் சந்தைக்கு வருவோர் அவதியடைகின்றனர். சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் துரை தலைமையில், நேற்று காலை உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலையை சீரமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன், சத்தியநாராயணன், சீனிவாசலு உட்பட பலர் பங்கேற்றனர். வட்ட செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.