கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நெசவுக்கார தெருவில் உள்ள லஷ்மிகணபதி, ராஜ அலங்கார முருகன், ராமலிங்கேஸ்வரர், தேவலமகரிஷி, நாகர், நவகிரகங்கள் மற்றும் கோஷ்ட தெய்வங்களான, பிரம்மி, மகேஸ்வரி வராஹி, வைஷ்ணவி, துர்கை மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கடந்த ஏப்., 21ல் நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம் நடந்தது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்த நிலையில் நேற்று, 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.இதையொட்டி காலை, 8:30 மணிக்கு, கணபதி ஹோமம், சண்டி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அம்மன் திருக்காப்பு களைதல், கணவன், மனைவி யாகசாலையில் சவுடேஸ்வரி அம்மன் எதிரில் சங்கல்பம் செய்து வைத்தல் ஆகியவை நடந்தது. 10:30 மணிக்கு, மஹா பூர்ணாஹூதியும், தொடர்ந்து ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு அபிேஷகமும், விநாயகர், முருகன், ராமலிங்கேஸ்வரர் மற்றும் தேவலர், நவக்கிரஹம் ஆகிய தெய்வங்களுக்கு பூஜையும், 12:00 மணிக்கு, சவுடேஸ்வரி அம்மனுக்கு நாகர் அலங்காரம் செய்து அன்னம் பாவித்து, மஹா தீபாராதனை நடந்தது.