உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.3.50 கோடி செம்மரக்கட்டை பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டியவருக்கு வலை

ரூ.3.50 கோடி செம்மரக்கட்டை பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டியவருக்கு வலை

ஓசூர்:பாகலுார் அருகே, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ஒரு கோடி ரூபாயில் வீடு கட்டி, சொகுசாக வாழ்ந்த புரோக்கரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே, கூசனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜு, 43. பாகூர் ஜங்ஷன் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் பின்புறம், செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை, ஆந்திர வனப்பகுதியில் வெட்டி, கடத்தி வந்ததும் தெரிந்தது.உள்ளூர் சந்தையில், 35 லட்சம் ரூபாயும், சர்வதேச சந்தையில், 3.50 கோடி ரூபாய் வரை விலை போகும் எனவும் தெரிந்தது. போலீசார் சோதனை செய்வதை அறிந்த ராஜு தலைமறைவாகி விட்டார்.செம்மரக்கட்டை கடத்தலில், புரோக்கர் போல செயல்பட்ட அவருக்கு பின்னால், பெரிய புள்ளிகள் பலர் இருப்பதாகவும், கூசனப்பள்ளியில் அவர், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சொகுசு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது.

வழக்கமாக வனத்துறை மெத்தனம்

நேற்று முன்தினம் இரவு, செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்த தகவல் தெரிந்து, உடனடியாக ஓசூர் வனச்சரக வனத்துறைக்கு, பாகலுார் போலீசார் தகவல் தெரிவித்தனர். மிகவும் தாமதமாக வந்த வனத்துறையினர், அதிகாலையில் செம்மரக்கட்டைகளை, போலீசாரிடமிருந்து வாங்கிச் சென்றனர். இதேபோல, 6 மாதங்களுக்கு முன், கக்கனுார் சோதனைச்சாவடியில் போலீசார் மூலம் சந்தனக்கட்டைகள் பிடிக்கப்பட்டன. அவற்றை வாங்கிச் செல்லவும் வனத்துறையினர் தாமதமாகவே வந்தனர்.மேலும், ஜவளகிரி, அந்திவாடி, தேன்கனிக்கோட்டை, குந்துக்கோட்டை உட்பட பல இடங்களில், வனத்துறை சோதனைச்சாவடி இருந்தும் வனத்துறையினர் பணியில் இருப்பதில்லை. அதனால், வனத்தில் அரிய வகை மரங்கள், வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை