| ADDED : ஜூலை 17, 2024 02:31 AM
கிருஷ்ணகிரி;கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மனுக்களை ஒப்படைக்கும் போராட்டத்தில், உதவித்தொகை கேட்டு கடந்த ஒரு ஆண்டாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உடனே உதவித்தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்.,களிலும் உடனே துவக்கி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்கி, 319 ரூபாயை கூலியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகளை, ஏ.ஏ.ஒய்., ரேஷன் அட்டையாக மாற்றி அனைத்து அட்டைக்களுக்கும் இலவசமாக, 35 கிலோ அரிசியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.இதையடுத்து, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் மனுக்களையும், கலெக்டர் சரயுவிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர். நிலுவையிலுள்ள உதவித்தொகையை வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் அட்டைகளை, ஏ.ஏ.ஒய்.,யாக மாற்றவும், உதவித்தொகை பெறவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கலெக்டர் சரயு தெரிவித்தார்.