| ADDED : டிச 29, 2025 06:27 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, ஆனந்துார் ஏரியில் மண் கடத்துவதாக கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு தகவல் போனது. அவரது உத்தரவின்படி ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி, துணை தாசில்தார்கள் நாகேந்திரன், ஜெயபால், சக்தி, சகாதேவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி மூலம் சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர். தாசில்தார் ராஜலட்சுமி அவர்களை கண்டித்தார். அப்போது, செங்கம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 47, ஊத்தங்கரை செங்கழுநீர்பட்டி தங்கபாலு, 35, ஆகியோர், பொக்லைன் வாகனத்தை வேகமாக இயக்கி, அதிகாரிகள் மீது மோதுவது போல செய்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தகவலின்படி, போச்சம்பள்ளி போலீசார் விரைந்தனர். போலீசாரை பார்த்தவுடன் சுரேஷ், தங்கபாலு தப்பியோடினர். பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேஷ் மற்றும் தங்கபாலு ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.