கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு4,416 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று நடக்கும் 'நீட்' நுழைவு தேர்வை, ஒன்பது மையங்களில், 4,416 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான 'நீட்' தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும், 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத்தில், 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா, 180 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது மையங்களில், 'நீட்' தேர்வு நடக்கிறது. அதன்படி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 360 மாணவ, மாணவியர், ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 480 பேர், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 480, சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 480, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 600.ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 480, ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 336, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 720, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 480 பேர் என மொத்தம் ஒன்பது மையங்களில், 4,416 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் தேர்வுக்கு வரவேண்டும். கனமான உடைகள் மற்றும் நீண்ட கை சட்டைகளுக்கு அனுமதி இல்லை. சோதனைக்கு போதுமான நேரம் கிடைக்கும் வகையில் மதியம், 12:30 மணிக்குள் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.