உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் விழாவில் ஒத்திகை நடத்தியும் திட்டம் குறித்த குறும்படம் சொதப்பல்

முதல்வர் விழாவில் ஒத்திகை நடத்தியும் திட்டம் குறித்த குறும்படம் சொதப்பல்

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை, ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் விழா மேடைக்கு காலை, 11:30 மணிக்கு வந்தார். அவர் வருவதற்கு முன், அவரது விழா ஏற்பாட்டை கவனிக்கும் அதிகாரிகள் குழுவினர், பல்வேறு ஒத்திகைகளை மேற்கொண்டனர்.'மக்களுடன் முதல்வர்' திட்டம் பற்றிய குறும்படம் போடுவது, பயனாளிகளை மேடைக்கு வரவழைத்து, நலத்திட்ட உதவிகளை பெறும்போது எப்படி நிற்க வேண்டும், எவ்வழியாக செல்ல வேண்டும் என வழி காட்டினர். அவர்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியை கூட விட்டு வைக்கவில்லை. அவர் எந்த இடத்தில் நின்று, நினைவுப்பரிசை வழங்க வேண்டும் என ஒத்திகை செய்து காண்பித்தனர்.இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவை சேர்ந்த சின்னபாப்பா என்பவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' வழங்கப்பட்டது. அவரை, 3 முறை மேடைக்கு அழைத்து இங்கு நில்லுங்கள், இப்படி வணக்கம் வையுங்கள், இந்த வழியாக செல்லுங்கள் என, அலுவலர்கள் கூறியபடி இருந்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு வந்தவுடன், ஒத்திகை படி அனைத்தும் நடந்தன. ஆனால் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் பற்றிய குறும்படம் போட்ட போது, 'ஒலி' பிரச்னை ஏற்பட்டு, வெவ்வேறு சப்தங்கள் வந்ததால், வீடியோவை பார்க்க முடியவில்லை. இதனால் குறும்படத்தை பாதியில் நிறுத்தி விட்டனர்.இதுபோல், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது என, நிகழ்ச்சி தொகுப்பாளர் சமாளித்தவுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. பல்வேறு ஒத்திகைகள் பார்த்தும், குறும்படம் சொதப்பி விட்டதே என, அதிகாரிகள் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ