| ADDED : ஆக 12, 2024 06:39 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சாலையோரம் நீண்ட நேரமாக முகாமிட்டிருந்த ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மரக்கட்டா காப்புக்காட்டில், ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிகிறது. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையோரம் முகாமிடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியடைகின்றனர். நேற்று முன்தினம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, மரக்கட்டா அருகே சாலையோரம் நின்றிருந்தது. இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், நின்றிருந்த யானைக்கு சில அடி துாரத்திற்கு முன்பாக, வாகனங்களை நிறுத்தி விட்டு, அது செல்வதற்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். ஆனால் யானை, நீண்ட நேரமாக செல்லாமல் நின்றிருந்ததால், கனரக வாகன டிரைவர்கள், வேறு வழியின்றி தங்களது வாகனங்களை இயக்கி செல்ல துவங்கினர். அந்த வாகனங்களை, ஒற்றை யானை எந்த தொந்தரவும் செய்யவில்லை. இருந்தபோதிலும், உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள் சாலையில் பயணித்தனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சாலையில் பயணித்தனர்.