மேலும் செய்திகள்
தக்காளி விலை சரிவு; விளைநிலத்திலேயே அழிகிறது
10-Mar-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 12 ஆயிரம் எக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் காய்கறிகள் சந்தைகள் மூலம் உள் மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது வெளிமாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் மகசூல் அதிகரிப்பாலும் விலை வெகுவாக சரிந்துள்ளது. விவசாயிகளிடம் கிலோ ஒன்றுக்கு தரத்தை பொருத்து, 3 முதல், 5 ரூபாய் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சில்லரை விற்பனையில் போக்குவரத்து செலவுடன் சேர்த்து, 6 முதல், 10 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆந்திரா மாநில தக்காளி வரத்து, உள்ளூரில் மகசூல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி யடைந்துள்ளது. இதனால் கால்நடைகளை, தக்காளி தோட்டத்தில் விட்டு மேய்ப்பதும், அறுவடை செய்த தக்காளியை சாலையோரங்களில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீணாக்காமல், தக்காளியை கூழாகவோ அல்லது பேஸ்ட்டாகவோ மாற்றினால் உணவு பொருள் வீணாவது தவிர்க்கப்படுவதுடன் லாபமும் கிடைக்கும் என்ற நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்துடன் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த வாகனம் மூலம் விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி சாஸ், ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், பதப்படுத்தும் வசதி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த வாகனம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட, ஒரு சில மாதங்களில் முடங்கியது. தற்போது விவசாயிகள் வழக்கம் போல், விலை வீழ்ச்சியால் தக்காளியை சாலையோரங்களில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலை வீழ்ச்சி காலங்களில் தக்காளியை பதப்படுத்தும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும். நடமாடும் தக்காளி கூழாக்கும் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினர்.
10-Mar-2025