மழைவெள்ளத்தால் பாதித்தோருக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆறுதல்
ஊத்தங்கரை, டிச. 4-ஊத்தங்கரையில், நேற்று முன்தினம் 'பெஞ்சல்' புயல் மழையால், காமராஜர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பேரிடரால் பொதுமக்கள் தவித்தனர். வீடுகளுக்குள், 5 அடிக்கும் மேலாக தண்ணீர் சூழ்ந்த நிலையில் அவர்களது உடமைகள், மாணவ, மாணவியரின் பாட புத்தகங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று ஊத்தங்கரை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆறுதல் கூறினார்.அப்போது, காமராஜர் நகர் பொதுமக்கள், கோரிக்கை படி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி, தெருக்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் முறையான வடிகால் அமைத்து கொடுக்கப்படும் என்றும், வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு, அரசு வீடு கட்டிக் கொடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு, உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.