உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்

மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி, 'தமிழகத்தில், 'மா' விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது' என, அக்கட்சியின் பொதுசெயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 35,000 ஹெக்டேர் பரப்பில், 'மா' சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அதிகளவில், 'மா' விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, 'மா'விற்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில், 'மா'விற்கு மான்யம் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடந்த முத்தரப்பு கூட்டத்தில், முடிவு எட்டப்படவில்லை. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம், 'மா' விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும், மீண்டும் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, 'மா'விற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்தார்.இந்நிலையில், 'மா' சாகுபடி விவசாயிகளின் துயரங்களை போக்க முன்வராத, தி.மு.க., அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், நாளை (20ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்குமென, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அதன்படி நாளை, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழக, 'மா' விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க, தமிழக அரசை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர், முனுசாமி எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணரெட்டி, அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் முன்னிலை வகிக்கின்றனர்.இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களுடன், 'மா' விவசாயிகள், வியாபாரிகள், உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை