போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட, என்.தட்டக்கல் கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த, இருளர் இன மக்கள் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இவர்களுக்கு, 40 ஆண்டுகளுக்கு முன், அதே இடத்தில் அரசு குடியிருப்பு வீடு வழங்கியிருந்தது. அந்த வீடுகள் தற்போது முற்றிலும் சேதமாகி, குடியிருக்க முடியாமல், 17 குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு, 15 வீடுகளை, கிராம வளர்ச்சி மறு கட்டமைப்பு திட்டத்தில், 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அவர்களுக்கு கட்டுமான பணி ஆணை வழங்கியது.இதையடுத்து, இருளர் இன மக்கள், தங்களது வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, தற்போது கடகால் அமைத்து, மூன்று மாதமாகியும் அவர்களுக்கு கட்டுமான பணிக்கான பணத்தை வழங்காமல் உள்ளதால், ஆத்திரமடைந்த இருளர் இன மக்கள், நேற்று காலை தட்டக்கல் பகுதியில் சாலை மறியலுக்கு முயற்சித்தனர் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை மற்றும் போலீசார், நிதி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன் இடம் கேட்டதற்கு, ''அவர்களுக்கு, கட்டுமான பணிக்கான நிதி இருப்பில் உள்ளது. அந்த கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்குவதற்கு உண்டான சர்வர், அப்டேட் ஆகாமல் உள்ளதால், அதை சரிசெய்து ஒரு வாரத்திற்குள், அவர்கள் கட்டுமான பணிக்கான நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.