பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; சர்வேயர், உதவியாளர் கைது
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர், அவரது உதவியாளர் இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் சுரேஷ். இவர், தன் அத்தை கெம்பம்மாவிற்கு பாகமாக கிடைத்த, 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் உட்பிரிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும், பட்டா மாறுதல் உட்பிரிவு செய்யப்படவில்லை. பணியை விரைந்து முடிக்க, கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த, வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த், சுரேசிடம், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளித்தார். போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயுடன் நேற்று மாலை, வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அருகே சுரேஷ் சென்றார். அங்கிருந்த சர்வேயர் ஜெயகாந்த், 29, பணத்தை வாங்கி, தன் உதவியாளர் திலீப்குமார், 29, என்பவரிடம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நாகராஜன், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.