உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அஞ்செட்டி அரசு மாணவர் விடுதியில் வார்டன் மீது புகார்; டி.இ.ஓ., விசாரணை

அஞ்செட்டி அரசு மாணவர் விடுதியில் வார்டன் மீது புகார்; டி.இ.ஓ., விசாரணை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அஞ்செட்டியை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர். யானைகள் நடமாட்டமுள்ள கிராமங்களில் இருந்து தினமும் மாணவ, மாணவியர் கல்வி பயில வந்து செல்வது சிரமம் என்பதால், அஞ்செட்டியில் மாணவர்கள் தங்கி படிக்க, அரசு மூலம் பிற்படுத்தப்பட்டோர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு, 50 மாணவர்கள் தங்கி கல்வி பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதியில் கடந்த கல்வியாண்டில் தங்கி படித்த மாணவர்களுக்கு, வார்டன் முருகன் சரியான உணவு வழங்கவில்லை என்றும், சரியான வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மாவட்ட கலெக்டர் சரயு விசாரணை நடத்த உத்தரவிட்டார். வார்டன் முருகன் சமீபத்தில் கெலமங்கலம் பகுதியிலுள்ள விடுதிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வீரமணி (பொறுப்பு) என்பவர் விடுதி வார்டன் பணியை கவனித்து வருகிறார்.வார்டன் முருகன் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க, ஓசூர் கல்வி மாவட்ட (இடைநிலை) அலுவலர் கோவிந்தன், நேற்று முன்தினம் விடுதியில் ஆய்வு நடத்தி, மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து விரிவான அறிக்கையை, மாவட்ட கலெக்டருக்கு கோவிந்தன் சமர்ப்பிக்க உள்ளார். அதன்படி, வார்டன் முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ