கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நள்ளிரவில், 'சிசிடிவி' முன் உதவி கேட்டு தெருவில் சென்ற பெண்ணின் வீடியோ பரவி, கொள்ளையடிக்கும் கும்பல் என வதந்தி பரவிய நிலையில், போலீசார் அதை மறுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், தமிழ்நாடு கிராம வங்கி அருகே வசிப்பவர் அர்ஜுனன், 71; விவசாயி. இவர் வசிக்கும் பகுதியில், 21ம் தேதி நள்ளிரவில், 35 வயது பெண், ஒவ்வொரு வீடாக சென்று, 'சார், சார், காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ' என, கேட்கிறார். இது அர்ஜுனன் வீட்டில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. மேலும், அவர் வீட்டருகே, 'சிசிடிவி' இருப்பதை பார்த்ததும் அப்பெண் கேமரா முன் நின்று, 'சார் என்னை காப்பாற்றுங்கள்' என, கூறுவதும், பின் அவ்வழியாக மற்றொரு நபர் வருவதும், அவருடன் அப்பெண் பேசியபடி செல்வதும் பதிவாகி இருந்தது. இக்காட்சி பரவிய நிலையில், 'வீட்டிலுள்ள நபர்களை உதவி கேட்டு, வெளியே வரவைத்து தாக்கி, கொள்ளையடிக்கும் கும்பலாக இருக்கலாம். 'எனவே, யார் வீட்டு கதவை தட்டினாலும், விபரம் தெரியாமல் திறக்க வேண்டாம்' என, அப்பகுதி மக்கள், 'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்பினர். இது குறித்து, கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், ''தெருவில் உதவி கேட்டு வந்த பெண் மிட்டஹள்ளியை சேர்ந்தவர். ''கணவருடன் ஏற்பட்ட தகராறில், உள்காயங்களுடன் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தண்ணீர் தாகத்தால், 'தண்ணீர் குடுங்க, காப்பாத்துங்க' என கேட்டுள்ளார். ''அவர், பர்கூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.