கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி, அக். 16-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. பிற்பகல், 1:00 மணிக்கு, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்புள்ள இடங்களில், மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, ரவுண்டானா, பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து குளம் போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி நகரில் மழையால் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டது.வாகன ஓட்டிகள் அவதிஊத்தங்கரையில் இருந்து சேலம் நோக்கி செல்லும் சாலையில் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே நேற்று பெய்த கனமழையால் சாலையில் மழை நீர், குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் அருகிலுள்ள கடைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் முறையாக அமைக்காததால் தண்ணீர் தேங்கியது. சாய்ந்த புளியமரம்ஓசூர் பகுதியில் நேற்று காலை, 6:45 மணிக்கு துவங்கிய மழை, தொடர்ந்து பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை முதலே வெயில் இல்லாததால் குளிர் அதிகரித்தது. அடைமழையால் ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் சுரங்கப்பாதை, தனியார் இருசக்கர வாகன ஷோரூம் எதிரே உள்ள ரிங்ரோடு, ராமநாயக்கன் ஏரிக்கரை சாலை உட்பட தாழ்வான இடங்களில், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.ஓசூர் மத்திகிரியில் அரசு கால்நடை பண்ணை அருகே, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையோர புளியமரம், நேற்று மதியம், சாலையில் சாய்ந்தது. மத்திகிரி போலீசார், 3 பொக்லைன் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தினர்.