ஓசூர்: கெலமங்கலம் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்படுவதால், தி.மு.க., அரசு மீது, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் நகர் பகுதியில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அரசு பள்ளிகள், வட்டார கல்வி அலுவலகம், டவுன் பஞ்., அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக, கெலமங்கலம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. கெலமங்கலம் பகுதியில் நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றனர். கோடை காலம் என்பதால், இரவில் மின்விசிறி இல்லாமல் துாங்க முடிவதில்லை.ஆனால், இரவிலும் மின்தடை ஏற்படுவதால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10 லட்சம் ரூபாய் அளவிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அவை வீணாகும் அபாயம் உள்ளது. கடந்த, 12 ஆண்டுகளாக மின்தடை பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மின்தடை ஏற்படுவதால், மின்வாரியம் மீது மட்டுமின்றி, தி.மு.க., அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகளுக்கு மின்தடை ஏற்படும் நிலையில், தொழிற்சாலைகள், குவாரிகளுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள மக்கள், இது தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிராக எதிரொலிக்கும் என, வெளிப்படையாக கூறுகின்றனர்.