ஈரோடு மாவட்டத்தில், ௭௫வது குடியரசு தினவிழா, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு அருகே ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தேசியக்கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளை கவுரவித்தார். சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர், பணியாளர், போலீசார் என, 124 பேருக்கு பாராட்டு சான்றிதழ், 51 காவலர்களுக்கு முதல்வர் பதக்கத்தை வழங்கினார். பல்வேறு துறைகளை சேர்ந்த, 31 பயனாளிகளுக்கு, 18.80 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். அரசு இசைப்பள்ளி உட்பட எட்டு பள்ளிகளை சேர்ந்த, 270 மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இவர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டது.புன்செய்புளியம்பட்டியில்...புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜனார்த்தனன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் பங்கேற்ற கவுன்சிலர், நகராட்சி அலுவலர், பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடியேற்றப்பட்டு, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பவானிசாகர் யூனியன் அலுவலகத்தில், சேர்மன் சரோஜா தேசிய கொடியை ஏற்றினார்.பவானியில்...பவானி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தியாகராஜ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணை தாசில்தார் ஜமுனாராணி, ஆர்.ஐ.,க்கள் மாதேஸ்வரி, விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., குமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பவானி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ரகுநாதன் கொடியேற்றினார். பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இளவரசி கொடியேற்றினார். பவானி யூனியன் அலுவலகத்தில் சேர்மன் பூங்கோதை கொடியேற்றினார். இதேபோல் சித்தோடு போலீஸ் ஸ்டேஷன், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.கோபியில்...கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி, தனது அலுவலகத்தில், தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். கோபி யூனியன் அலுவலகத்தில் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தேசிய கொடியேற்றினார். கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கோபி ஜே.எம்.,1 நீதிபதி விஜய் அழகிரி கொடியேற்றினார்.பள்ளிவாசலில் கொடியேற்றம்சென்னிமலையில் உள்ள பள்ளிவாசலில், 21 ஆண்டுகளாக, தேசியக்கொடி ஏற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் ஹமீது, முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் - நிருபர் குழு -.