உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லிட்டில் இங்கிலாந்து தளியில் 14 ஆண்டாக மூடியுள்ள படகுத்துறை

லிட்டில் இங்கிலாந்து தளியில் 14 ஆண்டாக மூடியுள்ள படகுத்துறை

ஓசூர்: தளி, பெரிய ஏரியில் தற்போதைய முதல்வர் ஸ்டாலினால், 14 ஆண்டுக்கு முன் திறக்கப்பட்ட படகுத்துறை மற்றும் பூங்கா, 14 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தளியில், இங்கிலாந்து நாட்டிற்கு இணையான சீர்தோஷண நிலை நிலவியதால், 'லிட்டில் இங்கிலாந்து' என ஆங்கிலேயர் அழைத்தனர். தளியை சிறந்த சுற்றுலா தலமாக்கும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த, 2009 ல், தளி பெரிய ஏரியில் பொதுப்பணித்துறை மூலம், 55.60 லட்சம் ரூபாய் மதிப்பில், படகுத்துறை மற்றும் திறந்தவெளி புல்வெளி பூங்கா அமைக்கப்பட்டது.சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில், 4 படகுகள் வாங்கப்பட்டன. பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அலங்கார பூஞ்செடிகள், நடைபாதை, நீர்வீழ்ச்சிகள், அமர்ந்து ஓய்வுவெடுக்க இருக்கைகள் அமைக்கப்பட்டன.மறுநாளே மூடல்கடந்த, 2009 டிச., 6 ல், அப்போதைய துணை முதல்வரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஸ்டாலின், படகுத்துறை மற்றும் பூங்காவை திறந்து வைத்தார். அன்று மட்டும் படகுத்துறை மற்றும் பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த நாளே படகுத்துறை மற்றும் சிறுவர் பூங்கா இழுத்து பூட்டப்பட்டது. இதனால், தளியை சிறந்த சுற்றுலா தலமாக்கும் சுற்றுலாதுறையின் கனவு கானல் நீராகியுள்ளது. தளிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கிறது. 14 ஆண்டுகள் மூடியே கிடக்கும் படகுத்துறை மற்றும் பூங்கா, தற்போது புதர்மண்டி சமூக விரோத கூடாரமாக மாறியுள்ளது.அரசுக்கு வருவாய் தளி பெரிய ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்துள்ளது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன், ஓசூரில் ஆய்வுக்கு வந்தபோது, தளி படகுத்துறையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆட்சி மாற்றம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2009 ல், படகுத்துறை மற்றும் பூங்கா திறக்கப்பட்ட போது, தி.மு.க.,தான் ஆட்சியில் இருந்தது. தற்போது தி.மு.க., கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது. அதனால், படகுத்துறை மற்றும் பூங்காவை திறந்தால், தளி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம், தளி பகுதி வளர்ச்சியடைந்து, வணிகர்களுக்கு வியாபாரம் பெருகுவதுடன், அரசிற்கும் கணிசமாக வருவாய் கிடைக்கும். அரசே நேரடியாக படகுத்துறையை செயல்படுத்த முடியா விட்டால், ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கலாம். அதன் மூலம் வருவாய் வரும். எனவே, கிடப்பிலுள்ள படகுத்துறை மற்றும் பூங்காவை திறக்க வேண்டும் என்பது, சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை