மாயமாகி போலீசார் தேடி வந்த அரசு பள்ளி மாணவியர் மீட்பு
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும், பாரண்டபள்ளியை சேர்ந்த, 2 மாணவியர், மேட்டுசூளகரையை சேர்ந்த ஒரு மாணவி என, 3 பேர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள், பள்ளிக்கு செல்லாமல் மாயமாகினர்.இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு, மாணவியர் பள்ளிக்கு வராதது குறித்து, தலைமை ஆசிரியை, 'வாட்ஸாப்'ல் குறுஞ்செய்தி அனுப்பினார். மாணவியரின் பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அன்றிரவு, 7:00 மணிக்கு மாயமான, 3 மாணவியரும், போச்சம்பள்ளி அடுத்த, அங்கம்பட்டியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியின் வீட்டிற்கு சென்று, அந்த ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு செல்ல போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, போலீசார் அவர்களை மீட்டு, போலீஸ் ஸ்டேசன் அழைத்துச்சென்று, அறிவுரைகள் கூறி, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.