உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

மாணவர் உட்பட இருவர் மாயம்கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர், 13 வயது சிறுவன்; தேன்கனிக்கோட்டை அருகே விடுதியில் தங்கி தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்; அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக ஊருக்கு சென்ற மாணவர் கடந்த, 30ல் மதியம், 3:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தை ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.* ஊத்தங்கரையை சேர்ந்த, 17 வயது மாணவி, முதலாமாண்டு டிப்ளமோ படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.இருவேறு விபத்து: 2 பேர் பலிவேப்பனஹள்ளி அடுத்த செம்பட்டியை சேர்ந்தவர் திருமல்லேஷ், 23, கூலித்தொழிலாளி; இவரும், திப்பேபள்ளியை சேர்ந்த ரமேஷ், 26, என்பவரும் நேற்று முன்தினம் மாலை, யமஹா எப்சட் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை ரமேஷ் ஓட்டியுள்ளார். பெலத்தியப்பன் கொட்டாய் அருகே பேரிகை - வேப்பனஹள்ளி சாலையில் சென்றபோது கட்டுப்பாடை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், திருமல்லேஷ் இறந்தார். படுகாயத்துடன் ரமேஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுபம் சிங், 26; கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி, அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 30 புல்லட்டில் பெங்களூருவிலிருந்து பர்கூர் நோக்கி வந்துள்ளார். மதியம், 3:30 மணியளவில், சுண்டம்பட்டி அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது புல்லட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சும்சிங் இறந்தார். கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.இளம்பெண் மாயம்: டிரைவர் மீது புகார்போச்சம்பள்ளி அடுத்த கோடிபதியை சேர்ந்தவர் சசிகலா, 32; இவர், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக கொட்டாவூரில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வந்துள்ளார்.கடந்த, 30 மதியம், 2:00 மணிக்கு வீட்டை விட்டு சென்ற சசிகலா வீடு திரும்பவில்லை. இது குறித்து சசிகலாவின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதில், தங்கள் மகள் சசிகலா பணிபுரியும் தொழிற்சாலையில் வேன் டிரைவராக பணிபுரியும் கவுண்டனுாரை சேர்ந்த சேட்டு, 30, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.சீனிவாச பெருமாள் கோவிலில் மத நல்லிணக்க அன்னதானம்கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஐகுந்தம் கொத்தப்பள்ளி, சந்துார், போச்சம்பள்ளி, ஜெகதேவி, கிருஷ்ணகிரி உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை முதல், அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.முன்னாள் ராணுவ வீரர்கள் உண்ணாவிரத போராட்டம்ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்கக்கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலகம் முன்பு, முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவரும், சட்ட ஆலோசகருமான சாந்தராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட அவை தலைவர் தேவராஜ், அகில இந்திய மாநில தலைவர் மோகன்ரங்கா உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சந்தையில் சின்னவெங்காயம்வரத்து அதிகரிப்பால் விலை சரிவுதர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து உழவர்சந்தைகளில், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம், 60 முதல், 62 ரூபாய்க்கு விற்றது. பின், வரத்து அதிகரிப்பால் இதன் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ, 45 ரூபாய்க்கும், நேற்று, 43 ரூபாய் எனவும் விற்பனையானது. சின்ன வெங்காயத்தின் இந்த தொடர் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சாலையோர முட்செடிகளைஅகற்ற மக்கள் கோரிக்கைஅரூரில் இருந்து, பேதாதம்பட்டி வரை உள்ள, 12 கி.மீ., சாலையில், இருபுறமும் ஏராளமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. இவை, சாலையில் எதிரே வரும் வாகனங்களை மறைப்பதால், விபத்துகள் ஏற்படுவதுடன் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. மேலும், பஸ்சில் ஜன்னல் ஓரம் பயணிப்பவர்களை பதம் பார்க்கின்றன. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இவைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.‍மொபைல்போன் பறிப்பு2 வாலிபர்களுக்கு காப்புதர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கருங்கல்பாடி புதுாரை சேர்ந்தவர் விவேகானந்தன், 38, லாரி உரிமையாளர். இவர், கடந்த, 27ல் அதிகாலை, 5:00 மணிக்கு அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த, 2 பேர் விவேகானந்தன் பாக்கெட்டில் இருந்த, 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்த விவேகானந்தன் அளித்த புகார்படி, அரூர் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல் போன் வழிப்பறி செய்ததாக, அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கெலவன், 25, ஈஸ்வரபாண்டி, 19, ஆகிய இருவரை கைது செய்தனர்.பிக்கப் வாகனம் மோதிகட்டட மேஸ்திரி சாவுபென்னாகரம் அடுத்த குழிபட்டியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மாதேஷ், 28; அவருடன் வேலை செய்துவந்த அதே ஊரை சேர்ந்த கார்த்திக், 26, தாசம்பட்டியை சேர்ந்த மூவேந்தர், 25 ஆகியோர் நேற்று முன்தினம் கட்டட வேலையை முடித்துவிட்டு, ஓசூரிலிருந்து, ஒரே டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் ஊருக்கு வந்துள்ளனர். ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பொரத்தூர் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே ஓசூர் நோக்கி சென்ற பிக்கப் வாகனம், அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாதேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த, இருவரும் படுகாயமடைந்தனர். புகார்படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் கூலித்தொழிலாளி பலிதர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 56; தென்னை மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, பழனிசாமி பஜாஜ் பிளாட்டினா பைக்கில் தென்கரைகோட்டைக்கு சென்றார். சிந்தல்பாடி -தென்கரைகோட்டை சாலையில், ஸ்ரீ ஜெயம் வேபிரிட்ஜ் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அங்கம்மாள், 55, அளித்த புகார்படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.செங்குந்த மகாஜன சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வுசெங்குந்த மகாஜன சங்க, தர்மபுரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல், தர்மபுரி நெசவாளர் நகர் செங்குந்தர் திருமண மஹாலில் நடந்தது. சங்க மாநில பொதுச்செயலாளர் குமரகுருபரன் தேர்தல் பார்வையாளராகவும், வக்கீல் லட்சுமி நாராயணன், அன்பு, சதாசிவம் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகவும், புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர். இதற்கான, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு தேர்தல் நடந்தது.இதில், சங்க, தர்மபுரி மாவட்ட தலைவராக சந்தோஷ்சிவா, பொதுச்செயலாளராக சச்சிதானந்தம், பொருளாளராக திருநாவுக்கரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று, மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேவராஜன், ராஜேந்திரன், பரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் உத்தண்டி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.வி.சி., கட்சி கொடியேற்று விழாகடத்துார் ஒன்றியம், குருபரஹள்ளியில் புத்தாண்டையொட்டி வி.சி., கட்சியின் கொடியேற்று விழா ஒன்றிய துணை அமைப்பாளர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.இதில் அக்கட்சியின் மாநில நிர்வாகி சேட்டு கொடியேற்றி, பதாகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயக்குமார், தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மார்கழி மாத பனியில்அவதிப்படும் மக்கள்தர்மபுரியில் மார்கழி மாத பனி அதிகரித்து வரும் நிலையில், குளிரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மார்கழி மாதமான தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் அதிக பனிப்பொழிவு மற்றும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், தொடர்ந்து பகல் முழுவதும் வீசி வரும் இந்த குளிரால், பள்ளி செல்லும் குழந்தைகள், காலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதை தொந்தரவுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிகாலையில் வயலுக்கு செல்லும் விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.பொதுமக்களுடன் போலீசார்கேக் வெட்டி கொண்டாட்டம்தர்மபுரியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். நேற்று, 2024-ம் ஆங்கில புத்தாண்டு தொடங்கியது. இந்த ஆங்கில புத்தாண்டை நாடு முழுவதும், மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில், 800 போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதில், தர்மபுரி ஜங்ஷன் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், பொதுமக்களுடன் இணைந்து, கேக் வெட்டி, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சாலையில் பயணித்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவருக்கும், இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை போலீசார் பரிமாறிக் கொண்டனர்.மது பதுக்கி விற்றவர் கைதுதர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் மாரண்டஹள்ளி எஸ்.எஸ்.ஐ.,க்கள் பச்சியப்பன், சந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, விளாங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ், 45, என்பவர், அவருடைய வீட்டிற்கு பின்னால், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த, 4,160 ரூபாய் மதிப்புள்ள, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, நாகராஜை கைது செய்தனர்.ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரியிலுள்ள தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தர்மபுரி துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில், நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில், கடந்த, 2023- ம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து, நள்ளிரவில், 2024- ஆண்டு பிறப்பை வரவேற்று நடந்த புத்தாண்டு சிறப்பு திருப்பலி, அருட்பணி ஜாக்சன் தலை‍மையில் நடந்தது. மேலும், பங்குதந்தை அருட்ராஜ் முதன்மை குரு உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், சோகத்துார், கோயிலுார், உட்பட பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனை நடந்தது.கட்டட மேஸ்திரி கொலையில்கைதான முக்கிய குற்றவாளிகெட்டுப்பட்டி ஏரிப்பகுதியில், கட்டட மேஸ்திரியை கொலை செய்ததில் இதுவரை, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எர்ரப்பட்டியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தேவன், 27; உடலில் காயங்களோடு மர்மமான முறையில், கடந்த டிச., 26 அன்று கெட்டுப்பட்டி ஏரிப் பகுதியில் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார், இறந்த தேவனின் சடலத்தை கைப்பற்றி, 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், தேவன் சாவு விவகாரத்தில், எர்ரப்பட்டியை சேர்ந்த பிரபு, 31, அனுமந்தபுரம் சுபாஷ், 24, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நாடராஜன், 19 ஆகிய, 3 பேரை டிச., 28ல் கைது செய்து, விசாரணை நடத்தினர். இதில், ஓராண்டிற்கு முன் மொபைல்போன் மாயமான விவகாரத்தில், தேவனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில், தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் எர்ரப்பட்டியை சேர்ந்த பாலாஜி, 19, விஜய், 24 ஆகிய, 2 பேரையும், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த எர்ரப்பட்டி ரஞ்சித், 23, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி