கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில்,
நடப்பாண்டில் மா விளைச்சல் பாதித்துள்ளதால், கடந்தாண்டை விட மாங்காய்
விலை, ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய
மழையின்றி நடப்பாண்டு மா விளைச்சல், 75 சதவீதம் குறைந்து, மா வரத்தும்
குறைந்துள்ளது.இதனால், வெளிமாநிலத்திலிருந்து
காவேரிப்பட்டணம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு மாங்காய் கொண்டு
வரப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, சிக்மங்களூர்,
ராஜபாளையம், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகை
மாங்காய்களை கொண்டு வந்து, மாலை நேரங்களில் ஏலம் விடுகின்றனர். இதை,
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வரும்
வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.கடந்தாண்டு, 30 கிலோ கொண்ட
ஒரு கிரேடு மல்கோவா மாம்பழம், 2,000 ரூபாய் வரை ஏலம் போன நிலையில்,
தற்போது, 3,000 முதல், 4,000 ரூபாய் வரை ஏலம் போனது. அதேபோல்,
செந்துாரா, 400 முதல், 1,500 வரையும், பெங்களூரா, 800 முதல், 1,200
வரையும், அல்போன்சா, 800 முதல், 2,000 வரையும், காலாபாடு 1,000 முதல்,
1,800 வரையும், பீத்தர், 500 முதல், 1,000 ரூபாய் வரையும், கடந்தாண்டை விட
தற்போது ஒன்றரை மடங்கு விலை அதிகரித்து ஏலம் விடப்படுகிறது.மாங்காய்களின்
தரம் மற்றும் அளவிற்கு ஏற்ப விலை கூடுதலாகவும், குறைவாகவும் ஏலம்
விடப்படுகிறது. நாளொன்றுக்கு, 10 டன் மாங்காய்கள் இங்கு ஏலம்
விடுவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.