இரவில் மூடப்படும் சுகாதார நிலையங்கள் நோயாளிகள் அவதி; 4 பேருக்கு மெமோ
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் சீத்தாராம் நகர், மூக்கண்டப்பள்ளி, அப்பாவு நகர், ஆவலப்பள்ளி, மத்திகிரி, எஸ்.பி.எம்., காலனி என மொத்தம், 6 இடங்களில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 50 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஒரு லேப் டெக்னீஷியன் மற்றும் ஊழியர்கள் பணியில் இருப்பர். தினமும் காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை டாக்டர் பணியில் இருப்பார். இரவில் செவிலியர் பணியில் இருக்க வேண்டும்.ஆனால் ஓசூரில் உள்ள, 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலானவற்றில், இரவில் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை. சில நேரங்களில் சுகாதார நிலையங்களை பூட்டி சென்று விடுகின்றனர். அதனால், அவசரமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் கூறுகையில்,'' நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது தொடர்பாக, விளக்கம் கேட்டு 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.