உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை வசதி இல்லாத மலை கிராமங்கள் மருத்துவமனை செல்ல சிரமப்படும் மக்கள்

சாலை வசதி இல்லாத மலை கிராமங்கள் மருத்துவமனை செல்ல சிரமப்படும் மக்கள்

ஓசூர் : மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, பாலதொட்டனப்பள்ளி மலை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு மருத்துவ சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, உப்பராயனப்பள்ளி, பல்லப்பள்ளி, கெம்பத்தப்பள்ளி, குருபரப்பள்ளி உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இதில், உப்பராயனப்பள்ளி மற்றும் பல்லப்பள்ளி கிராம மக்கள், பாலதொட்டனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல, 2 கி.மீ., துாரத்திற்கு சாலை வசதி இல்லை. மலைக்காலங்களில் மக்கள் செல்லும் வழிப்பாதை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளால் பயன்படுத்த முடிவதில்லை. உப்பராயனப்பள்ளி அருகே உள்ள நஞ்சப்பன் ஏரி நிரம்பி விட்டால், இந்த வழிப்பாதை வழியாக தான் உபரி நீர் வெளியேறும். அச்சமயத்தில், இப்பாதையில் மக்களால் பயணிக்க முடியாது. அதுபோன்ற காலங்களில், விவசாய நிலங்கள் வழியாகத்தான் மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இப்பாதையில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாது. இதேபோல், கெத்தப்பள்ளி கிராம மக்களும், பாலதொட்டனப்பள்ளி செல்ல சாலை வசதி இல்லாமல், வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று கிராம மாணவ, மாணவியரும், பாலதொட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல, இப்பாதையைத்தான் பயணிக்கின்றனர். எனவே, தளி ஒன்றிய நிர்வாகம், மலை கிராம மக்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !