பென்னாகரம்: பென்னாகரம் அருகே, மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் குடிநீர், மண் கலந்து வருவதால், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், குறைந்தளவே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது என்றும், கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, மஞ்சநாயக்கனஹள்ளி பொதுமக்கள் கூறுகையில், 'பென்னாகரம் ஒன்றியம், மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்.,ல், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், ஆழ்துளை கிணறு மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணறு வறண்ட நிலையில், ஒகேனக்கல் குடிநீர், 20,000 லிட்டர் மட்டும் வருவதால், மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. வரும் தண்ணீர் மண் கலந்து வருகிறது. ஒரு வீட்டிற்கு, 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. தண்ணீர் பற்றாகுறையால், 5 கி.மீ., தொலைவில் உள்ள கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் 5வது மைல் ஆகிய இடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இது குறித்து, பஞ்., நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி, சுத்தமான ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்றின் மூலம், தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும்' என்றனர்.இது குறித்து, மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்., செயலாளர் ராஜகோபாலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பஞ்.,ல் குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சில நாட்கள் குடிநீர் நிறம் மாறிதான் வந்துள்ளது. அதுவும் சரி செய்யப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வழங்கி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.